டெல்லியை வாட்டும் குளிர் - 17 விமானங்கள் ரத்து; ரயில் சேவை கடுமையாக பாதிப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் குளிர் நிலவுகிறது. குளிருடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால், டெல்லி பாலம் மற்றும் சஃப்டர்ஜங் விமான நிலையங்களில் காணும் திறன் 500 மீட்டருக்கும் குறைவாக இருக்கிறது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 30 விமானங்கள் தாமதமாகின. 17 விமானங்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் புறப்பாடு, தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் விமான நிலையங்களில் மணிக் கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (ஜன.16) காலை வெளியிட்ட அறிக்கையில், “பஞ்சாப் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லி, ஹரியாணா, வடக்கு மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்குவங்கத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. கிழக்குப் பகுதிகளிலும் பரவலாக பனிமூட்டம் நிலவுகிறது. குளிர்ந்த காற்றும், அடர்ந்த பனிமூட்டமும் அடுத்த 48 மணி நேரத்துக்கு தொடரும். இதனால் டெல்லிக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது. காலை நேரத்தில் அடர் பனிமூட்டம் தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை